“இலங்கை மக்களின் துன்பியல் வாழ்க்கையை புதிய வடிவில் உலகரியச் செய்தார் கவிஞர் பொத்துவில் அஸ்மின்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
ஊடகப்பிரிவு-
இலங்கை கலைஞர், கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதி, தென்னிந்திய பிரபல நடிகரும் பாடகருமான டி.ராஜேந்தரின் குரலில் வெளிவந்துள்ள இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பான ஒலிப்பேழை, இந்தக் காலத்தின் மிக முக்கிய அழியாத பதிவாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிலை குறித்து, பாடலாசிரியர் அஸ்மினின் எழுத்துக்களில் உருவான பாடல் இருவெட்டினை, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனிடம், கவிஞர் அஸ்மின் நேற்றைய தினம் (26) கையளித்திருந்தார்.
இதன்போது, கருத்து தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்,
“இலங்கையின் கிழக்கு மாகாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட பொத்துவில் கவிஞர் அஸ்மின், பல படைப்புகளை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் வழங்கியிருக்கின்றார். தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கலைஞர் அஸ்மின் பழைமை எழுத்துலகில் இருந்து விடுபட்டு, காலத்தின் தேவைகளை கவனத்தில் கொண்டு கவி வரிகளை வடித்து, அவற்றை பாடலாக்கி சமூகத்துக்கு வழங்கியிருப்பது வரவேற்புக்குரியதாகும்.
அஸ்மினின் திறமைகளை நான் நன்கு அறிவேன். அந்தவகையில், இலங்கையின் இன்றைய நிலையினையும், மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் துயரங்களையும் தத்துரூபமாகப் படம் பிடித்து, தனது பாடல் வரிகள் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளமையானது பாராட்டுக்குரியதாகும்.
கலைஞர் அஸ்மினின் இந்த முயற்சிக்கு தென்னிந்திய பாடகர் டி.ராஜேந்தர், அவரது குரல் மூலம் வழங்கியிருக்கும் உந்துசக்தி உண்மையிலேயே இலங்கை மக்களுடைய மனவலியை பிரதிபலிப்பனவாக அமைந்திருக்கின்றது. இந்தப் பாடலை இயற்றிய நம் நாட்டுக் கலைஞர் பொத்துவில் அஸ்மின் அவர்களுக்கும், அது போன்று பாடலை பாடிய டி.ராஜேந்தர் அவர்களுக்கும், அதே போன்று அவருடன் இணைந்து பாடிய திருகோணமலையைச் சேர்ந்த பாடகர், இசையமைப்பாளர் சமீல், சரோ சமீல் ஆகியோருக்கும், இந்தப் படைப்பை வெளியிட உதவி செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பொத்துவில் அஸ்மின் ஒரு சர்வதேச கலைஞராக பரிணாமம் பெற்றுள்ளார். இந்தியா, மலேசியாவில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் அவர் கவிமழை பொழிந்து, இலங்கையின் நற்பெயருக்கும் மகுடம் சூட்டியுள்ளார்.
அதேபோன்று, என்னை அநியாயமாக சிறைப்படுத்தியிருந்த வேளை, என்மீது அவர் கொண்டிருந்த அன்பின் வெளிப்பாட்டினால், எனது துன்பத்தில் பங்குகொள்ளும் வகையில், “வௌஞ்சி நின்ற வெள்ளாமை” என்ற தலைப்பில் பாடல் ஒன்றை இயற்றி, அதனை சமூகமயமாக்கியதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூற விரும்புகிறேன். மேலும், அவரது இலக்கு நோக்கிய பயணம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.