இனங்களுக்கிடையிலான ஐக்கியம், புரிந்துணர்வே சமூகத்துக்கான பாதுகாப்பையும் இருப்பையும் நிலைப்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
‘ரிஷாட் பதியுதீன் பவுண்டேஷனின்’ ஏற்பாட்டில், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் வைபவம், மன்னார், கொண்டச்சியில் நேற்று (29) இடம்பெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
“வன்னி மாவட்டத்தில் சிதைந்துபோய்க் கிடந்த தமிழ் – முஸ்லிம் உறவை துளிர்க்கச் செய்து, அதனை வலுப்படுத்துவதில் மக்கள் காங்கிரஸ் பெரும்பங்காற்றியுள்ளது. தற்போதும் அவ்வாறான இன உறவைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் முன்னின்று உழைக்கின்றது. இவ்விரு சமூகங்களும் இனிமேல் பிரிந்துவிடவே கூடாது. இணைந்து வாழ்வதன் மூலமே நமக்கு விமோசனம் ஏற்படும்.
நமது பதவிக் காலத்தில் வன்னிக்கு மட்டும் நாம் சேவையாற்றவில்லை. அகதியாகச் சென்ற எம்மை வாழவைத்த புத்தளம் மாவட்டத்துக்கும் நாம் முடிந்தளவு பணியாற்றியிருக்கின்றோம். அதுமாத்திரமின்றி, இன, மத பேதமின்றி எமது பணிகள் நாடளாவிய ரீதியில் வியாபித்தன. அதனால்தான் என்மீது இனவாதிகளுக்கும் எதிரணியினருக்கும் காழ்ப்புணர்வு ஏற்பட்டது. நமது அரசியல் பலத்தை தகர்க்க வேண்டும், தடுக்க வேண்டும், நிறுத்த வேண்டுமென பலர் அலைந்து திரிகின்றனர்.
பல்கலைக்கழகக் கல்வியும் அதனுடன் இணைந்த வாழ்க்கையும் மாணவர்களாகிய உங்களுக்கு பொற்காலமாகவே இருக்கும். இறைவன் உங்களுக்கு வழங்கிய இந்த அருட்கொடையை, அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதுமாத்திரமன்றி, ‘சமூக அந்தஸ்தையும் உயர் நிலையையும் அடைவதற்கான பொன்னான சந்தர்ப்பம் இது’ என்ற உணர்வோடு நீங்கள் கற்க வேண்டும்.
வறுமை என்பது கல்விக்குத் தடையாக அமைவதில்லை. பட்டினியோடும் வறுமையோடும் கல்வி கற்ற பலர், இன்று உயர்துறைகளில் பிரகாசிக்கின்றனர். மாணவ சமூகத்துக்கிடையே ஒற்றுமையும் நிதானமும் அவசியமாகின்றது. இதனை நீங்கள் கடைப்பிடித்தால் வருங்காலச் சந்ததிக்கு இது முன்மாதிரியாக அமையும். பல்கலைக்கழகக் காலத்தில், நேரான சிந்தனையுடன் கல்வியை கவனமாகக் கற்றுக்கொள்ளுங்கள். இதன்மூலம் எதிர்கால வாழ்வு ஒளிமயமானதாக மாறும்.
பல்கலைக்கல்வி முடிவடைந்த பின்னர், நீங்கள் சமூகத்தைப் பற்றிய சிந்தனைகளையும் வரவழைக்க வேண்டும். நமது ஊர், நமது பிரதேசம், நமது நாடு என்ற சிந்தனையின் மூலமே, சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும்” என்று கூறினார்.