அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும் போது, அது இனரீதியாக செயற்படுவதாகவே தோன்றுகின்றதென  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் எம் .பி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய அவர் கூறியதாவது,

 இரண்டு வருடங்களுக்கு முன்னர் வவுனியா அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டார். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர், மன்னார் அரசாங்க அதிபராக இருந்த முஸ்லிம்  ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் , வவுனியாவில் முஸ்லிம் ஒருவருக்கு இந்தப்பதவி வழங்கப்பட்டது. மூன்று இனங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்த மாவட்டத்தில் பணி புரிந்த இஸ்லாமியர் திடீரென இட மாற்றப்பட்டது ஏன்? இவர் செய்த குற்றம்தான் என்ன? இல்லாவிடின் முஸ்லிம் என்ற காரணத்துக்காகவா இவ்வாறு நடத்தது?

பல்லின மக்கள் வாழும் நாடு என்று எம்மைப்பற்றி வெளிநாடுகளில் பெருமையாக பேசும்  நீங்கள் இந்த நாட்டிலே அதனை செயலில் காட்டுகின்றீர்களா?

அரச அதிபரை அவசரமாக இட மாற்றியதை நீங்கள் சாதனையாக கருதுகின்றீர்களா? திருமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிள் முஸ்லிம் சமூகம் பெருவாரியாக வாழ்கின்றது. இலங்கை நிர்வாக சேவையில் தகுதி பெற்ற சுமார் இருபதுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் இருக்கின்றனர். வீதாசாரப்படி மூன்று பேர் நியமிக்கப்படவேண்டும்.  ஆகக்குறைந்தது அம்பாறை மற்றும்  திருமலையிலாவது முஸ்லிம் அரச அதிபர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாறாக இருந்தவரையும் இடமாற்றி இருப்பது நியாயமா? இது பழி வாங்கலா? எனவே இந்த இட மாற்றம் ரத்துச்செய்யப்பட வேண்டும்

வவுனியா பம்பைமடு குப்பை பிரச்சினை தொடர்ந்தும் தீர்வு காணப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது. 4மாதங்களுக்கு முன்னர் தீர்வை பெற்று கொடுக்கும் வகையில் உயர் மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் இது வரையில் எடுக்கப்படாததால் குப்பை மேட்டை அண்டி வாழும் மக்கள் துன்பத்தில் வாழ்கின்றனர். எனவே தான்  இப்போது ஆர்ப்பாட்டம்  நடத்துகின்றனர்.

இந்த மக்கள் புதிதாக குடியேறி உள்ளதாக தவிசாளர் ஒருவர் கூறியதாக அறிகின்றோம். இது வேதனை தருகின்றது. சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இந்த பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களே மீண்டும் வந்து சட்ட ரீதியாக குடியேறி வாழ்கின்றனர்.

மக்கள் ஆணையை மதித்தே இந்த அரசாங்கத்திற்கு ஆட்சியை வழங்கினோம். எனினும் பழிவாங்கல் இடம்பெறுகிறது. கடந்த அரசில் இடம் பெற்ற வேலைத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காது இந்த அரசு இழுத்தடிக்கிறது. கொந்தராத்துக் கார்கள் வாழ முடியாது விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *