இந்திய வீடமைப்புத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம் குடும்பங்களை உள்வாங்குவது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்திய தூதரக முதற் செயலாளர் ஜெஸ்டின் மோகனுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் யாழ்.
மாவட்ட முஸ்லிம்களை வீடமைப்புத் திட்டத்தில் உள்வாங்குவதன் அவசியம் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் முதற் செயலர் ஜெஸ்டினிடம் விளக்கினார்.
யாழ். மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் கடந்த 24 வருடங்களாக அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனர்.
இவர்களுள் 2000 முஸ்லிம்கள் மீண்டும் யாழ். சென்று மீள்குடியேற பதிவு செய்துள்ள போதிலும் அங்கு காணியற்ற காரணத்தினாலும் போதிய வசதிகளின்றிய நிலையிலும் மீண்டும் அகதி முகாம்களுக்கே திரும்பியுள்ளனர்.
இவர்கள் தமது சொந்த இடத்துக்கு சென்று வாழவே விரும்புகின்றனர்.
யாழ் பூர்வீகத்தைக் கொண்ட அனைவரும், தங்களுக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தினூடாக வீடுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலுள்ளனர்.
கடந்த காலங்களில் மூன்று கட்டங்களாக பல்லாயிரம் வீடுகள் வழங்கப்பட்ட போதிலும் அவற்றுள் இந்த யாழ். முஸ்லிம்கள் உள்வாங்கப்படவில்லை.
எனவே யாழ். மாவட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் குறிப்பாக இதுவரை பதிவு செய்துள்ள 600 குடும்பங்களுக்கும் முதலிலாவது வீடுகளை வழங்க இந்திய அரசு மனிதாபிமான ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
எருக்கலம்பிட்டி – பெரியமடு
இது இவ்வாறிருக்க, மன்னார் மாவட்டம் எருக்கலம்பிட்டி மற்றும் பெரியமடு பிரதேசங்களிலுள்ள இந்திய வீடமைப்புக்கு தகுதிபெற்ற பல முஸ்லிம் குடும்பங்கள் உள்வாங்கப்படாமை தொடர்பில் மக்கள் மற்றும் பொதுநல அமைப்புக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலும் அமைச்சர் ரிஷாத் இந்திய உயர்ஸ்தானிகர் முதற் செயலாளரிடம் எடுத்துரைத்தார்.
எருக்கலம்பிட்டி கிராமத்தில் பல்லாயிரம் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்கின்ற போதிலும் 150 வீடுகள் மாத்திரமே அங்கு கிடைத்துள்ளன.
எனவே, அக்கிராமத்தில் வீடு பெறுவதற்கு தகுதியானவர்களை மீளாய்வுசெய்யுமாறு அமைச்சர் ரிஷாத் வேண்டிக் கொண்டார்.
அத்துடன் இந்திய வீடமைப்புத் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது முதலில் வீட்டுக்கான அடிக்கல் நடப்பட்ட கிராமம் மன்னார் – பெரியமடு கிராமம்.
அந் நிகழ்வில் நானும், அமைச்சர் பசில் ராஜபக்ஷவும், முன்னாள் உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவும் கலந்து கொண்டதை முதற் செயலருக்கு நினைவூட்டிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அந்தக் கிராமத்தின் வீடுகளைப் பெற 300 இற்கு மேற்பட்டோர் தெரிவு செய்யப்பட்டும் ஒரு சிலருக்கு மாத்திரமே வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அதேநேரம், இம் 300 பேரையும் தவிர மேலும் பல வீடுகளைப் பெற தகுதியுள்ளவர்கள் தெரிவு செய்யப் படும் போது அவர்கள் விடுபட்டுள்ளனர்.
எனவே இந்த விடயத்தில் பெரியமடு மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்குமாறும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இதன்போது வேண்டிக் கொண்டார்.
அமைச்சரின் மேற் சொன்ன அனைத்து விடயங்களையும் கவனமாக செவிமடுத்த முதற் செயலாளர் ஜெஸ்டின் மோகன் நியாயமான முறையில் இந்த விடயங்களை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.