கிண்ணியாவில் உயிர் அழிவுகளை ஏற்படுத்தியுள்ள டெங்கு நோயின் உக்கிரத்தை அடுத்து கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்துக்குள் உள்வாங்க வேண்டுமென்ற கோரிக்கை அந்தப் பிரதேச மக்களிடம் வலுவாக எழுந்துள்ளது.
கிண்ணியா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான போதிய வசதி இன்மை இல்லாததாலேயே டெங்கு மரணங்கள் சம்பவித்ததாகவும் டெங்குவின் தீவிரத் தாக்கம் அதிகரித்ததாகவும் அந்தப் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சுனாமியின் பிறகு தற்காலிகமாக அமைக்கப்பட்ட கிண்ணியா வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை,வைத்தியர், தாதிமார் பற்றாக்குறை ஆய்வுக் கூடப்பிரச்சினை, வைத்திய உபகரணங்கள் போதியளவு இல்லாமை, ஆளணிப்பிரச்சினை எனும் இன்னோரன்ன குறைபாடுகள் நிலவி வருகின்றது.
கடந்த வாரம் கிண்ணியாவுக்கு விஜயம் செய்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுடன் கிண்ணியா ஜம் இய்யதுல் உலமா, மஜ்லிஷூஷ்ஷூரா பள்ளிவாசல் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கிண்ணியா வைத்தியசாலை மத்திய அரசாங்கத்துக்குள் உள்வாங்க வேண்டியதன் அவசியத்தைத் தெரிவித்ததுடன் அமைச்சரிடம் அந்த கோரிக்கை தொடர்பில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.
திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கிண்ணியா நகர சபை முன்னாள் தவிசாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப் ஆகியோரும் அமைச்சரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தனர்.
அத்துடன் கிண்ணியா வைத்தியசாலையை நிரந்தரக் கட்டிடத்தில் மாற்றி சகல வசதிகளையும் கொண்ட தரமான வைத்தியசாலையை அமைத்துத் தருமாறு ஊர்மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ரிஷாட் துரித கதியில் இயங்கினார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரை சந்தித்து கிண்ணியா நிலவரங்களுக்கான தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்தார்.
குறிப்பாக சுகாதார அமைச்சர் ராஜிதவிடம் கிண்ணியா வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்திற்குள் உள்வாங்க வேண்டியதன் அவசியத்தை அதற்கான நியாயமான காரணங்களை எடுத்துக் கூறி அதற்கான இணக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று மீண்டும் (22) புதன் கிழமை கிண்ணியாவுக்கு விஜயம் செய்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் உடன் சென்றிருந்தார். கிண்ணியா பொது நூலகத்தில் மஹ்ரூப் எம்பியின் தலைமையில் ”டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம்” தொடர்பான மாநாடொன்றும் ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதியமைச்சர் அமீர் அலியும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு விடயங்களுக்கு அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் தீர்வு வழங்கப்பட்டது.
கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசுக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக பகிரங்கமாக அறிவித்த அமைச்சர் ரிஷாட் கிழக்கு மாகாண அமைச்சு விடுவித்தால் இதனை இலகுவாக மேற்கொள்ள முடியுமென்றும் கூறி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் “மாகாணசபைக்கு அதிகாரங்கள் கேட்டு போராடி வருகின்ற இந்த நிலையில் மாகாண அமைச்சின் வசமிருக்கும் கிண்ணியா வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து நிற்கின்றது.
மாகாண அரசுக்கு அதிகாரம் வேண்டுமென போராடுபவர்களில் தானும் முதன்மையானவர் என்றும் எனினும் இந்தக் கோரிக்கைக்கு எழுந்தமானமாக என்னால் பதில் கூற முடியாதெனவும் தெரிவித்தார்.
மத்திய அரசாங்கத்திடம் கிண்ணியா வைத்தியசாலையை ஒப்படைப்பதில் இருக்கும் சிக்கல்களை குறிப்பாக பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அங்கு தெரிவித்தார். அதாவது மாகாண அமைச்சரவையின் அனுமதி, மாகாணசபையின் ஒப்புதல் மற்றும் மத்திய சுகாதார அமைச்சின் அங்கீகாரம் என்பனவற்றை கடக்க வேண்டுமென அவர் கூறினார்.
முதலமைச்சர் ஹாபிஸின் கருத்தின் படி கிண்ணியா மக்களின் கோரிக்கை தொடர்பில் மாகாண அரசாங்கம் எந்தளவு இதய சுத்தியசாக பணியாற்றப் போவதென்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. அமைச்சர் ரிஷாட் கிண்ணியா மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு மேற்கொண்டு வரும் மனிதாபிமான இந்த முயற்சிக்கு எந்தளவு தூரம் வெற்றி கிடைக்குமென்பது தெளிவில்லாமல் இருக்கின்றது.
13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென முதலமைச்சர் நசீர் அஹமட் அடிக்கடி கூறிவருகின்றார். ஆனால் அந்த முயற்சி கை கூடுவதற்கிடையில் மாகாண அமைச்சின் சுகாதாரத்துறையின் ஓட்டைகளினால் மக்களின் உயிர்கள் அநியாயமாக பலியாவதற்கும் காரணமாக இருக்கக் கூடாது. அதேவேளை முதலமைச்சர் நசீர் அஹமட் கூறுவது போன்று மாகாண சுகாதார அமைச்சுக்கு போதிய அளவு நிதியை ஒதுக்கீடு செய்தால் இந்தப் பிரச்சினை தலை தூக்காதது தான் எனினும் இது சாத்தியமா?
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பைசல் காசிம் ஆகியோரின் மூலம் ஹாபிஸின் கோரிக்கைக்கு பரிகாரம் கிட்டுமா? இவையெல்லாம் கேள்விக்குறியான ஒன்றே. எது எப்படி இருந்த போதும் அதிகார மோதலினால் மக்களின் உயிர்கள் பறி போவதை மனிதாபிமானம் கொண்டவர்கள் அனுமதிக்கக் கூடாது.
கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசாங்கம் உள்வாங்கும் என்ற நம்பிக்கையில் காலத்தை கடத்தும் கிண்ணியா மக்களுக்கு விடிவு கிட்டுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.