அண்மைய வரவு செலவுத் திட்டத்தின் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு பலன்களை நுகர்வோருக்கு கொடுக்க தவறும் வர்த்தகர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் படி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பட்ஜெட்டில் இருந்து விலை குறைப்பு செய்யப்பட்ட பொருட்களுக்கான பலன் இன்னும் நுகர்வோருக்கு சென்றடையவில்லை என்று நுகர்வோரிடமிருந்து இருந்து பல புகார்கள் எமக்கு கிடைத்துள்ளது என அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களின் தலைமையிலான புதிய அரசின் விருப்பத்திற்கு ஏற்ப, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினூடாக சீனி கோதுமை மா பாண் உள்ளிட்ட 13 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டது.
சீனியின் ஒரு கிலோவின் விலை 10 ரூபாவினாலும் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 12.5 ரூபாவினாலும் 400 கிராம் எடையுடைய பால் மாவின் விலை 100 ரூபாவினாலும், பயறு ஒரு கிலோவின் விலை 40 ரூபாவினாலும், டின் மீனின் விலை 60 ரூபாவினாலும் உழுந்து ஒரு கிலோவின் விலை 60 ரூபாவினாலும் மாசி ஒரு கிலோ கிராமின் விலை 200 ரூபாவினாலும் காய்ந்த மிளகாயின் விலை 25 ரூபாவினாலும் குறைக்கப்பட்;டது.
வர்த்தககள் இவ்வாறு நுகர்வோர் மீதான அண்மைய வரவு-செலவுத் திட்ட பலன்களை கொடுக்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிணங்க 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் நுகர்வோர் தொடர்புக் கொள்வதன் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபை அலுவலகங்கள் சுற்றி வளைப்புக்கள் ஊடாக சோதனைகள் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையானது நுகர்வோர் நலன்களை பாதுகாக்கும் ஓர் உயர் அரச அமைப்பு ஆகும்.