“அதிகார ஆணவமும் இனவாத நடவடிக்கைகளுமே நாட்டை பேரழிவுக்கு உள்ளாக்கியுள்ளது;
பதவியில் அமர்த்தியோரே பாதையில் இறங்கி துரத்தும் கேவலம்” – ரிஷாட் எம்.பி!

ஊடகப்பிரிவு-

நாட்டின் ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு கோரி, பாமரர்களும், படித்தவர்களும் சிறுவர்களும் பெரியோரும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளமை, இந்த நாட்டின் துரதிஷ்டமாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று (07) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“இன்று இந்த நாடு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாதைகளிலே சிறுவர்கள் முதல் பெரியோர் வரை, படித்தவர் முதல் படிக்காதவர் வரை எல்லோருமே “கோட்ட கோ ஹோம்” என்ற கோஷங்களுடன் திரிகின்ற மிகவும் இழிவான நிலை இந்த நாட்டுக்கு வந்துள்ளது. நமது நாட்டில் எத்தனையோ ஜனாதிபதிகள் பதவி வகித்தனர். ஆனால், அதற்கு மாற்றமாக எந்தவொரு ஜனாதிபதியும் அவமானப்படாத நிலை தற்போதைய ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது. இவருக்கு பைத்தியம் என்று கூறுகின்றனர். இவ்வாறான நிலை ஏற்பட்ட பிறகும், இந்த சபையிலே ஒருசில அமைச்சர்கள் “நாங்கள் ஒருபோதும் விலகப் போவதில்லை, ஜனாதிபதியையும் விலக அனுமதிக்கமாட்டோம், அவர் விலகவும் மாட்டார், எதற்கும் முகங்கொடுக்க தயாராக உள்ளோம்” என பேசுகின்றனர்.

அவர் நாட்டின் தலைமைக்கு தகுதி இல்லாதவர் என தேர்தலுக்கு முன்னரேயே நாங்கள் உணர்ந்துகொண்டவர்கள். அதனாலேயே நாம் அவருக்கு எதிராக பிரசாரம் செய்தோம். எனினும், அவருக்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. பாராளுமன்றத் தேர்தலிலும் அவரது கட்சி வெற்றியீட்டியது. இவ்வாறு வாக்களித்தவர்கள்தான், இன்று நடு வீதிகளிலும் சந்திகளிலும் அவருக்கும், அவரது அரசுக்கும் எதிராக கோஷமிடுகின்றனர்.

அமெரிக்கா, லொஸ் ஏஞ்சல்சிலே உள்ள அவரது மகனின் வீட்டுக்கு முன்னாள் சென்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்கின்றவர்கள் என்ன மடையர்களா? அல்லது சஜித்தின் ஆதரவாளர்களா? அல்லது அநுரவின் ஆதரவாளர்களா? அல்லது சுமந்திரனின் ஆதரவாளர்களா? என்று சிந்திக்க வேண்டும். இவர்களின் கோஷத்தை மதித்து, இதன் அர்த்தத்தை புரிந்துகொள்ளாமல் இந்த சபையில் வந்து விதண்டாவாதம் பேசுவது முட்டாள்தனம் மட்டுமல்ல, ஆபத்தையும் கொண்டுவரும். நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.

இரண்டு வருடகாலம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை சிந்தியுங்கள். பதவிக்கு வந்து அவசர அவசரமாக, 20வது திருத்தத்தை கொண்டுவந்தீர்கள். பாராளுமன்ற அதிகாரத்தை பறித்து தனி நபர்களிடம் ஒப்படைத்தீர்கள். “முஸ்லிம் கட்சிகள் கூடாது, முஸ்லிம் வாக்குகள் கூடாது” எனக் கூறிய நீங்கள், எதிரணியில் வெற்றிபெற்ற முஸ்லிம் எம்.பிக்கள் ஏழு பேரைக் கொண்டு 20வது திருத்தத்தை நிறைவேற்றினீர்கள். அதன்மூலம் கிடைத்த இலாபம் என்ன? பிரதமருக்கு இருந்த அதிகாரத்தை, அவரது தம்பி கோட்டாவுக்கு வழங்கினீர்கள். இவ்வாறன அதிகாரம் தனிநபருக்கு சென்றிருக்காவிட்டால், இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினையை பாராளுமன்றம் பொறுப்பேற்றிருக்க முடியும். பிரதமர் பொறுப்புக் கூறும் நிலை ஏற்பட்டிருக்கும். எனவே, நீங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட இந்த 20 வது திருத்தம்தான் இந்தப் பிரச்சினையின் மூல வேராகும்.

இந்த இரண்டு வருடங்களிலும் நாட்டின் பொருளாதார நிலை பற்றி சிந்தித்திருக்கின்றீர்களா? கடன் சுமை, மக்களின் பொருளாதார பிரச்சினை தொடர்பில் ஏதாவது திட்டங்கள் தீட்டினீர்களா? இதற்கெல்லாம் கொவிட்டைக் காரணம் காட்ட முடியாது. கொவிட் பிரச்சினை உலகில் எல்லா நாடுகளையும்தான் ஆக்கிரமித்தது. ஆனால், மற்றைய நாடுகள் இவ்வாறு தடுமாறவில்லை. எதற்கெடுத்தாலும் வரிசையில் நிற்கும் நிலை எந்த நாட்டிலும் ஏற்படவில்லை.

ஜனாதிபதியின் முதலாவது உரையிலே இனவாதம் பேசினார். இரண்டாவது உரையிலே கூரகல, மண்மலை எல்லாவற்றையும் மீட்டுவிட்டோம் என்றார். யாரிடமிருந்து இவற்றை மீட்டீர்கள்? முஸ்லிம்கள் காலாகாலமாக பராமரித்து வந்த உரிமைகளை பறித்து எடுத்தீர்கள். உங்கள் அதிகாரத்தை வைத்து, அவற்றை கபளீகரம் செய்துவிட்டு, வீராப்புடனும் மமதையுடனும் பேசினீர்கள். இதனால் பொருளாதாரம் முனேற்றம் அடைந்ததா? கடன் சுமைகள் அடைக்கப்பட்டதா? பெரும்பான்மை சிங்கள மக்களை சந்தோசப்படுத்துவதற்காக இவ்வாறு பேசினீர்கள். இந்த இரண்டு வருடகாலம் இந்த நாட்டை குட்டிச்சுவராக்கியதை ஜனாதிபதி இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும். கோட்டாபய தலைமைக்கு தகுதி இல்லாதவர் என்பதை குமார வெல்கம அன்று சொன்னார். அதனை அவர் இன்று நீரூபித்திருக்கிறார். அதன் வெளிப்பாடே அனைத்து சாராரும் ஜனாதிபதிக்கு எதிராக பாதைகளிலே நடத்தும் போராட்டங்கள்.

இங்கு ஒரு சில கள்வர்கள் இருக்கிறார்கள். நாட்டில் உள்ள 20 இலட்சம் விவசாயிகளை பஞ்சத்திலே கொண்டுவந்து நிறுத்தி, விவசாயத்தை நாசமாக்கிய ஒரு அமைச்சர் இருக்கிறார். நாட்டிலே பாதைகளை போட்டு, பாதைகளின் மூலம் கொமிசன் எடுக்கின்ற ஒரு அமைச்சர் இருக்கின்றார். இவ்வாறான ஒரு சிலர்தான், இன்று மக்களின் எதிர்ப்பு கோஷங்களை மதிக்காமல், “கோட்டா போகமாட்டார்“ என்று சொல்கின்றனர். எங்களுக்கு கோட்டா பதவி விலகுவாரா இல்லையா? என்பதல்ல பிரச்சினை. எமக்கு எமது நாடு தேவை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிற்பாடு எவ்வளவு பொய்களை பரப்பினீர்கள். நாட்டில் உள்ள 20 இலட்சம் முஸ்லிம்களையும் குற்றவாளிகளாக ஆக்கினீர்களே! “வத கொத்து” என்று ஒரு பொய்யை பரப்பினீர்கள். வைத்தியர் ஷாபியின் மீது அபாண்டங்களைச் சுமத்தினீர்ளே. இந்த பாராளுமன்றத்தை அடித்து உடைத்து, சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்தீர்களே! இதெல்லாம் அடாவடித்தனம் அல்லவா?

இன்று அப்பாவி இளைஞர்கள், தங்களுடைய பசிக்காக, தங்களுடைய பிள்ளைகளின் பால்மாவுக்காக பாதையிலே அழுது புலம்புகிறார்கள். அவர்களுடைய கோஷத்தை அடக்குவதற்காக, நேற்று இங்கிருக்கும் அமைச்சர் ஒருவர் “வாருங்கள் மோதிப் பார்ப்போம்” என்று கூறுகிறார். கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் இந்த அமைச்சர்கள்தான், இன்று கோட்டாபயவை பதவி விலக வேண்டாம் என்று கூறுகின்றார்கள்.

ஐந்து வருடங்கள் மக்கள் ஆணை தந்தார்கள்.  மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஒரு வீரனாக, கடவுளாக பார்த்தார்கள். அதே மக்களால்தான், இந்த நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே எந்தவொரு ஜனாதிபதியும் கேவலப்படாத அளவுக்கு கேவலப்படுத்தப்படுகின்ற ஒருவராக, கோட்டாபய ராஜபக்ஷ இன்று இருந்துகொண்டிருக்கிறார். எனவே, மக்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள்.

“நீங்கள் அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுங்கள்” என்று இங்குள்ளவர்கள் கூறுகின்றனர். பதவிகளுக்காக எதிர்க்கட்சி இங்கு பேசவில்லை. எதிர்க்கட்சியிடம் திட்டமிருக்கின்றது. இன்று கோட்டாபய ராஜபக்ஷ வேண்டாம் என்று சொல்லும் பாதையில் உள்ள மக்கள், அவருக்கு கீழே எந்த அமைச்சர்கள் வந்து அமர்ந்தாலும், ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே, நீங்கள் சிந்தித்து நியாயமான ஒரு முடிவை மேற்கொள்ளுங்கள். எல்லோரும் சேர்ந்து அவசரமாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பொருத்தமான, பஞ்சத்தை போக்கக் கூடிய, நாட்டில் நிரந்தர அமைதியைக் கொண்டுவரக் கூடிய நல்லதொரு பொருளாதாரக் கொள்கையை கொண்டுவாருங்கள். அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு எதிர்க்கட்சி தயாராக இருக்கிறது” என்று கூறினார்.

By shafni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *