முல்லைத்தீவு, முள்ளிவாய்கால் மேற்கு கடற்கரைப் பகுதியில், மியன்மாரில் இருந்து சுமார் 115 ற்கு மேற்பட்ட அகதிகள், கடந்த வாரம் கரையொதுங்கியதையடுத்து, அவர்கள் திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர், திருகோணமலை ஜமாலியா பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த, மியன்மார், ரோஹிங்யா அகதிகளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஆகியோர், சனிக்கிழமை (21) திருகோணமலை, ஜமாலியா பாடசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
அடிப்படை வசதிகள் கூட இல்லாமலுள்ள மியன்மார், ரோஹிங்யா அகதி மக்களை சந்தித்து, அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்ட தலைவர் ரிஷாட் பதியுதீன், அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் வழங்கிவைத்தார்.
மேலும், அரசாங்கத்தின் ஊடாக இவர்களுக்கு முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்ந்து, பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் ஐ.நா சபையின் ஊடாக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.