சமூகங்களை சீண்டும் செருக்குத்தனத்தில் செயற்பட்டால் கோட்டாவின் நிலையே ஏற்படும்;

கல்விச் சான்றிதழ்களை பரீட்சித்துப் பார்க்கும் பாராளுமன்றமாகச் செயற்படாமல், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் சபையாகச் செயற்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய அவர் கூறியதாவது,

“எழுபது வருட அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கே, தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்தனர். இதை விடுத்து, எம்.பிக்களின் கல்வித்தகைமைகளை பரீட்சித்தல், விவாதித்தல் செயற்பாடுகளே அண்மைக்காலமாக இந்த பத்தாவது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகிறது. இந்நிலை நீடித்தால், அரசாங்கம் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேரிடலாம். எனவே, ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுங்கள்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் இருக்கும் நல்ல பண்புகள், தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களிடமும் இருக்க வேண்டும். 159 எம்.பிக்களை வைத்திருக்கும் செருக்குத்தனத்தில் செயற்பட்டால், கோட்டாபயவுக்கு ஏற்பட்ட இழி நிலையே ஏற்படும். 147 எம்.பிக்களுடன் ஆட்சிக்கு வந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் துரத்தியடிக்கப்பட்டது ஏன்? அகம்பாவம் மற்றும் ஆணவத்துடன் நடந்ததால், இன்று மூன்று எம்.பிக்கள் தெரிவாகுமளவுக்கு அவர்கள் இழிவுபடுத்தப்பட்டனர்.

கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கூறியே ஆக வேண்டும். இது தொடர்பில், சுகாதார அமைச்சர் நேற்று வழங்கிய பதிலில் எமக்குத் திருப்தி இல்லை. மக்களால் தெரிவானவர்கள் என்ற உரிமையுடனேயே இவ்விடயத்தைக் கோருகின்றோம். எமது மதத்தை நிந்தித்த கோட்டாவுக்கு இறைவன் வழங்கிய தண்டனையாகவே அவரது ஆட்சிக் கவிழ்ப்பை நோக்குகின்றோம்.

இதுவே எமது நம்பிக்கை. எல்லா மதங்களும் நல்லதையே போதிக்கின்றன. எனவே, சிறுபான்மைச் சமூகங்களை சிறுமைப்படுத்தும் இழி செயலைச் செய்ய வேண்டாம்.

அல் ஆலிம் பரீட்சையை தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் விரைவாக நடத்தி, சிறந்த மௌலவிமார்களை ஆசிரியர்களாக நியமியுங்கள்.

அஸ்வெசும சிறந்த திட்டம்தான். ஆனால், இவற்றை வழங்கும் முறைகள் ஒழுங்காக இல்லை. விதவைகள், ஏழைகள் மற்றும் ஊனமுற்றோருக்கு இந்தக் கொடுப்பனவுகள் சென்றடையவில்லை. சமுர்த்தி உத்தியோகத்தர்களைப் புறந்தள்ளி இப்பணிகள் முன்னெடுக்கப்படுவதனாலே, இதில் குறைபாடுகள் நிலவுகின்றன.

சமூகங்களப் புறந்தள்ளும் அல்லது ஒரு சமூகத்தை மாத்திரம் குறிவைக்கும் செயற்பாடுகளை எதிர்ப்பதற்கு ஒருபோதும் தயங்கமாட்டோம். மனோ கணேசன், முன்னாள் எம்.பி. சுமந்திரன் ஆகியோருடன் முன்னெடுத்த பணிகளை மீண்டும் செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

By editor1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *