அதிக ஆசனங்களைக் கைப்பற்றுவோம் என தலைவர் ரிஷாட் உறுதி!

மக்கள் ஆணையின் நம்பிக்கையுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இம்முறை பொதுத் தேர்தலில் இருமுனை வியூகங்களில் களமிறங்கியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் தனித்தும் வன்னி, புத்தளம், குருநாகல், அநுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் வேட்புமனுக்களை இக்கட்சி தாக்கல் செய்துள்ளது. அதிகபட்சம் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றும் வியூகம் இம்முறை தேர்தலில் வெல்லப்படும் என்பதே மக்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பாகும்.

கடந்த பொதுத்தேர்தலிலும் இதே யுக்தியுடன் களமிறங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நான்கு ஆசனங்களை வென்றிருந்தது. இவ்வாறு பெறப்பட்ட மக்களின் அமானித ஆணையை மீறிச் செயற்பட்ட மூன்று எம்.பி.க்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஆட்சி, அதிகாரங்களுக்கான கூட்டாக இல்லாமல், ஆசனங்களை வெல்வதற்கான விடயங்களுக்கே, ஐக்கிய மக்கள் சக்தியுடன் செய்யப்பட்ட தேர்தல் உடன்பாடுகளில், பிரதான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டணியில், வன்னி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், இன்று (11) வவுனியா மாவட்டச் செயலகத்தில் தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,

“ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றன.

ஒரு பெண் வேட்பாளர் உட்பட, அனைத்து மதங்களைச் சேர்ந்த வேட்பாளர்களையும் ஒன்றிணைத்து, ஒற்றுமையாக மாவட்டத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் களம் இறங்கியுள்ளோம்.

அனுபவமுள்ளவர்கள், கல்விமான்கள் மற்றும் ஆற்றலுள்ள புதுமுகங்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம். எனவே, வன்னி மக்கள் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அதிகபட்ச உறுப்பினர்களை தெரிவுசெய்ய வெண்டும். அதன்மூலம், இந்த மாவட்டத்திற்கு தொடர்ந்தும் நல்ல பணிகளை செய்வதற்கு நாம் எண்ணியுள்ளோம்.

கடந்த நான்கு வருட காலமாக கோட்டா அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ள எமது அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பிக்கவும், மாவட்டத்தின் முன்னேற்றத்துக்காகவும் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

By editor1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *