வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் முடிவுகள்,சகல மாணவர்களதும் எதிர்கால இலட்சியங்களுக்கும், முன்னேற்றங்களுக்கும் வழிகாட்டப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்பதியுதீன், இப்பரீட்சையில் எழுபது வீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்.இதுபற்றி அவர் தெரிவித்துள்ளதாவது, பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் “ஏ” சித்திபெற்று கல்விச் சமூகத்திற்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.இலவசக் கல்வியின் பெறுமானங்களும் இவர்களால் பயனடைந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.இதேபோன்று ஏனைய மாணவச் செல்வங்களின் பெறுபேறுகளும் அவர்களது ஊக்கம் முயற்சி,அர்ப்பணிப்புக்களை எடுத்துக் காட்டுகின்றன.இம்முயற்சிகளில் சில மாணவர்கள் தவறியிருக்கலாம்.இத்தவறுகளை ஒருபோதும் தோல்விகளாகக் கருதாது தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.வெற்றியும் இலட்சியமும் கைக்கெட்டும் வகையில் அடுத்த அர்ப்பணிப்புக்கள் அமைய வேண்டுமென்பதே எனது விருப்பம்.
நவீன உலகின் சவால்களை உடைத்தெறிய கல்வியே இன்றுள்ள கை வந்த ஆயுதமாகும்.ஒன்பது பாடங்களிலும் “ஏ” சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை உரித்தாக்குவதில் மனமகிழ்ந்தவனாக,உயர் தரக் கல்விக்குத் தகுதி பெற்றுள்ளவர்களையும் பாராட்டுகிறேன்.இத்துடன் மட்டும் நின்று விடுவதல்ல எமது நோக்கம்.பெறுபேறுகளில் தவறிய மாணவர்கள்,வருங்காலத்தில் வாழ்த்தப்படுமளவிற்கு பெறுபேறுகள் கிடைக்க பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
