பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் அத்தியாவசியத் தேவைகளுடன் தொடர்புபட்ட போக்குவரத்துப் பிரச்சினையை தீர்க்கும் வகையில், மாந்தை கிழக்கு பிரதேசத்திலுள்ள வீதிகளையும், உள்வீதிகளையும் புனரமைப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இந்த திணைக்களங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உத்தரவிட்டார்.  

முல்லைத்தீவு, மாந்தை கிழக்குப் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை (13) இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் காதர் மஸ்தான், சாந்தி ஸ்ரீஸ்கந்த ராஜா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் நிரஞ்சனாவின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாகாண அமைச்சர் சிவநேசன், மாகாண சபை உறுப்பினர் ரவிகரன், பிரதேச சபைத் தவிசாளர் நந்தன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

வீதிப் பிரச்சினை, போக்குவரத்துப் பிரச்சினை குறிப்பாக, பாடசாலை பஸ் சேவை, கிரவல் மண் பிரச்சினை ஆகியவற்றை விரைவில் தீர்த்து வைக்கும் வகையில், அதனுடன் தொடர்புபட்ட முல்லைத்தீவு மாவட்ட உயரதிகாரிகள் ஒன்றுகூடி, இந்தப் பிரச்சினைகளை ஆராய்ந்து, முடிவுகட்ட வேண்டுமென்று அமைச்சர் விடுத்த வேண்டுகோளையடுத்து, நாளை (14) மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கு, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இன்று இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டு அவற்றுக்குத் தீர்வுகாணப்பட்டது. மாந்தை கிழக்கில் வாழும் மக்களுக்கான பொதுக்கிணறு, பொது மலசலகூடம், பொதுக்குடிநீர் தேவைகள் ஆகியவை தொடர்பாக, பிரதேச சபை உடனடியாக அறிக்கை ஒன்றை தயாரித்து, பிரதேச செயலாளரிடம் வழங்கினால், அதற்குரிய நிதியை விடுவிக்க முடியுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

குளங்களின் அபிவிருத்தி, நீர்ப்பாசனப் பிரச்சினை, வைத்தியர் பற்றாக்குறைப் பிரச்சினை தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு, அதுதொடர்பில், மேற்கொண்டு சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு அபிவிருத்திக்குழு அனுமதியளித்தது.

கிராமங்களில் உள்ள அமைப்புக்களும், நலன்புரிச் சங்கங்களும் நமக்குள்ளே முரண்பட்டுக்கொண்டிருப்பதனாலேயே, அபிவிருத்தி நடவடிக்கைகள் இழுபறிக்குள்ளாவதாக குறிப்பிட்ட அமைச்சர், அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் கூட்டங்களுக்கு வரும்போது, சரியான புள்ளி விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சுகாதாரப் பிரச்சினை, மாந்தை கிழக்கில் அரச வங்கியில்லாப் பிரச்சினை, ஆயுர்வேத வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்ட போது, இந்தப் பிரதேசத்தில் அரச வங்கியொன்றை அமைப்பதற்கு அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.

மாந்தை கிழக்கில் விளையாட்டு மைதானம், கலாசார மண்டபம், விளையாட்டுப் பூங்கா ஆகியவற்றை அமைப்பதற்கான அனுமதியை அபிவிருத்திக்குழுக் கூட்டம் வழங்குவதாகவும், அதற்கான மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *