யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விஷேட கவனஞ்செலுத்த வேண்டுமேன அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் “2017 கம் உதாவ செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மன்னார், நறுவிலிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள “லூர்து நகர்” வீடமைப்புத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் இன்று (05) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றினார். அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், பிரதியமைச்சர் காதர் மஸ்தான், குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் ரிஷாட் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கு, கிழக்கில் கோர யுத்தத்தினால் இடம்பெயர்ந்து உள்நாட்டிலும், இந்தியாவிலும் வாழ்ந்த மக்கள் இப்போது தாம் வாழ்ந்த பிரதேசத்தில் மீண்டும் வந்து, வீடுகள் இல்லாததினதால் கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். எனவே, இந்தப் பிரதேசத்தில் வீடில்லாப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அவர்கள் முன்னர் வாழ்ந்த வீடுகள் முற்றாகத் தகர்ந்தும், அழிந்தும் போனதால் இந்த மக்களின் வீடில்லாப பிரச்சினையை வித்தியாசமான பிரச்சினையாக அணுகி இதனைத் தீர்த்து வைக்க வேண்டும்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மக்களால்  இன்னும் நேசிக்கப்பட்டுவரும் உதாரண புருஷரான முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் புத்திராரன அமைச்சர் சஜித் பிரேமதாசவின் முயற்சியினால், வீடுகள் அற்றவர்களை வீடுகள் உள்ளவர்களாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அந்தவகையில், வடக்கிலும் மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இற்றைவரை 34 மாதிரி கிராமங்களை அவரது அமைச்சு அமைத்து வழங்கி உள்ளது

கட்சி, இன, மத பேதங்களுக்கு அப்பால் அவர் தமது கடமைகளை சரிவரச் செய்து வருகின்றார். மன்னார் மாவட்டத்தில் காணிகள் இருந்தால் 100 மாதிரிக் கிராமங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென அவர் அரச அதிபரிடமும்,   எம்மிடமும் தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், அமைச்சர் என்ற வகையிலும் அவரது நடவடிக்கைகளுக்கு நான் பூரண ஒத்துழைப்பை வழங்குவேன். நீண்ட காலமாக எமது மக்களுக்கு இருந்து வரும் இந்த வீடில்லாப் பிரச்சினை, அவரின் வருகையின் பின்னராவது தீரும் என எதிர்ப்பார்க்கின்றேன்.

பாரம்பரிய மூலிகை உற்பத்தித் தோட்டம் ஒன்றை அவர் மன்னார் மாவட்டத்தில்   இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இந்த அரிய திட்டத்தினை வீட்டுக்கு வீடு விஸ்தரிப்புச் செய்ய பிரதேச செயலாளர்களும், கிராம சேவையாளர்களும் பங்களிக்க வேண்டும். இலங்கையில் இது வெற்றி பெற்றால் ஆண்டு தோறும் மூலிகையின் இறக்குமதிக்காக செலவிடப்படும் சுமார் 800 அல்லது 9௦௦ மில்லியன் ரூபாய்களை மிச்சப்படுத்தி, நமது உள்ளூர் மக்களின் திட்டத்துக்கு அதனை  பயன்படுத்தலாம்.  அத்துடன், மன்னார் பள்ளிமுனையில் அவரது தந்தை பிரேமதாச அமைத்துக் கொடுத்த வீடுகள் தற்போது உடைந்த நிலையில் காணப்படுகின்றன. எனவே, இவற்றைத் தகர்த்துவிட்டு புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என அமைச்சர் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *