வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் தமது ஜூம்ஆ கடமைகளை மேற்கொள்வதற்கு 2மணிநேரம் அனுமதி வழங்குவதென்று ஏற்கனவே அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு அரசாங்க  நிர்வாக மற்றும் முகாமைத்துவ  அமைச்சின் தாபன பணிப்பாளர் நாயகம் மீண்டும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளருக்கு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பெப்ரவரி மாதம் 21ம் திகதி எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த போதே, இது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் பணிபுரியும் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு இந்த கடமை வசதி மறுக்கப்பட்டு வருவதாகவும்,  இதனால் அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் தமது கட்டாய கடமையை நிறைவேற்றுவதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும், தனக்கு முறைபாடு கிடைத்துள்ளதை சுட்டிக்காட்டியே அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சிடம் கோரியிருந்தார்.

தாபன விதியின் உபபிரிவு 12:1 அதிகாரம் XII, கீழ் 30.08.2016 பொது நிர்வாக சுற்றரிக்கை 21/2016 அமைய முஸ்லிம் ஊழியர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுவதன் அவசியம் பற்றிய மேற்கோளுடன்  இந்த நடவடிக்கையை மீண்டும் கட்டாயமாக அமுல்படுத்துமாறு தாம் அமைச்சர்களின்   செயலாளர்கள், பிரதம மாகாண செயலாளர்கள், நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக  பணிப்பாளர் நாயகம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *