திகனையில் முஸ்லிம்கள் வசிக்கும் கிராமங்களில் இனவாதிகள் நடாத்திய மோசமான தாக்குதல் சம்பங்களை பார்வையிடுவதற்காக கொழும்பிலிருந்து இன்று மாலை (05) அந்தப் பிரதேசத்துக்கு விஜயம் செய்துகொண்டிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இரவு 09.00 மணியளவில் கட்டுகஸ்தோட்டையிலும் இனவாதிகள் தாக்குதல் நடத்துவதாக கேளிவியுற்றதையடுத்து அநதப் பிரதேசத்துக்கு விரைந்தார்.

கட்டுகஸ்தோட்டை, கஹல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசலை, சுமார் 20 பேர்கொண்ட இனவாதக் கும்பல் பள்ளிவாசலுக்குள் புகுந்து, பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியதை அவதானிக்க முடிந்ததது.

மூன்று மாடிகளைக் கொண்ட அந்தப் பள்ளிவாசலில் சம்பவம் நடந்த போது, ஐந்து பேர் இருந்ததாகவும், குண்டர்கள் பள்ளிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது, அங்கிருந்தவர்கள் மூன்றாவது மாடியில் ஏறி அங்கிருந்து வேறு வழியாக பாய்ந்து தப்பி ஓடியதால், தாங்கள் உயிர் பிழைத்ததாகவும் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

பள்ளிவாசல் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருந்தது. சம்பவம் நடந்து முடிந்த பின்னரே பொலிஸாரும், இராணுவத்தினரும் பள்ளிவாசல் அமைந்திருந்த பிரதான வீதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை  காணமுடிந்ததது.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து பொலிஸ்மா அதிபரை தொடர்புகொண்ட அமைச்சர், திகன சம்பவத்தின் பின்னர், கண்டி மாவட்டத்தில் பல முஸ்லிம் கிராமங்களில் இனவாதிகளின் அச்சுசுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், போதியளவு பாதுக்காப்பு இல்லை எனவும், மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், பள்ளிவாசலுக்கு அருகில் வசிப்பவர்களுடன் நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்தார், பின்னர், அங்கு பாதுக்காப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.

இதேவேளை, கண்டி திகனை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்ற அமைச்சர், பிரதான வீதியில் மிகவும் மோசமாக அடித்து நொறுக்கப்பட்டு கிடந்த கடைத் தொகுதிகள் மற்றும் பள்ளிவாசல்களையும் பார்வையிட்டார். அங்கிருந்த பொதுமக்களிடம் அமைச்சர் விபரங்களைக் கேட்டறிந்தார்.

கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பிரதேசத்தில் மயான அமைதி நிலவுகின்றது. எனினும், ஆங்காங்கே இராணுவத்தினரும், பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திகனைப் பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததையும் காண முடிந்தது  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *