சிரேஷ்ட பத்திரிகையாளர் எம்.கே.முபாரக் அலி இன்று காலை (05) காலமான செய்தி அறிந்து கவலையடைந்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் மர்ஹூம் கியாஸின் மகனான முபாரக் அலி தனது தந்தையின் வழியில் பத்திரிகைத் துறையில் பெரும்பணி செய்தவர். மல்வானையைப் பிறப்பிடமாகக கொண்ட இவர், சமூகத்தின்பால் கொண்ட அக்கறையினால் சமூகப் பணியை மும்முரமாகச் செய்தவர்.

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அஸ்வரின் இணைப்புச் செயலாளராக இருந்து, அவரது சமூகப் பணிகளில் எல்லாம் தோளோடு தோள் நின்று பக்கபலாமாக செயற்பட்டிருக்கின்றார்.

1990 ஆம் ஆண்டு வடமாகாண முஸ்லிம் அகதிகள் புத்தளத்தில் வந்து தஞ்சமடைந்திருந்த போது, பல நாட்கள் அங்கு வந்து தங்கியிருந்து, மர்ஹூம் அஸ்வருடன் இணைந்து அகதிகளின் நல்வாழ்வுக்காக உழைத்ததை நான் இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன்.

மர்ஹூம் அஸ்வர் முஸ்லிம் சமய கலாசாரா விவகார இராஜாங்க அமைச்சராகவும், பாராளுமன்ற விவகார அமைச்சராகவும் இருந்த போது, அவரை நாடி வரும் பொதுமக்களுக்கு இன,மத பேதமின்றி மர்ஹூம் முபாரக் அலி செயலாற்றி, அவர்களது தேவைகளை முடிந்தளவு நிறைவேற்றி இருக்கின்றார்.

பத்திரிகை உலகில் எல்லோராலும் நேசிக்கப்பட்ட முபாரக் அலி, முஸ்லிம் மீடியா போரத்தின் நீண்டநாள் உறுப்பினர். அரசியல் கட்சித் தலைவர்களுடன் மிக நெருக்கமான தொடர்பை வளர்த்துக்கொண்டவர். அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டில் உறுப்பினராக இருந்து கல்விப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

அன்னாரின் பிரிவினால் வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்வதோடு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *