அம்பாறை மாவட்டத்தில்  குறுகிய காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அபரிமிதமான வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு மூவின மக்களின் ஒத்துழைப்புடனும், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளின் அரவணைப்புடனும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை இம்முறை கைப்பற்றுவோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார்.

கைத்தொழில், வர்த்தக அமைச்சில் நேற்று மாலை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

தமிழ், முஸ்லிம், சிங்கள மூவின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில், அங்கு வாழும் மக்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்று நங்கள் நல்லாட்சியை உருவாக்குவோம். இன ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த மாகாணத்தை யதார்த்தபூர்வமாக மாற்றி, மக்களின் சுமுக வாழ்வுக்கு வித்திடுவோம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை தேர்தலில் வடக்கில், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் பெரும்பாலான சபைகளில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இரண்டு சபைகளில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பும் மேலும், ஒரு சபையில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கின்றது.

குறிப்பாக, தமிழ்ச் சகோதரர்கள் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான தேர்தலில் 13 ஆசனங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்டு 11 ஆசனங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. அதேபோன்று முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் சிங்கள சகோதரர்கள் எமது கட்சிக்கு வாக்களித்து பிரதிநிதிகளைப் பெற்றுத் தந்துள்ளனர்.

எம்மை நம்பி வாக்களித்த அனைத்து சகோதரர்களுக்கும் நாம் நன்றி தெரிவிப்பதோடு, தேர்தல் காலத்தில் எமது கட்சி வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றித் தருவோம் என உறுதியளிக்கின்றோம் என்று அமைச்சர் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *