புத்தளம் மாவட்ட வைத்தியசாலையை சகல வசதிகளையும் கொண்ட தரமான வைத்தியசாலையாக மாற்றித்தர அத்தனை நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் அதற்கான திட்ட வரைபை ஒருமாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் இன்று காலை மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் ராஜித சேனாரத்ன அங்குள்ள வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த பல வேண்டுகோளை ஏற்று நடவடிக்கை எடுத்த பின்னர் மறிச்சுக்கட்டி இலவன்குளம் வீதி வழியாக புத்தளம் வந்தார்.

புத்தளம் வைத்தியசாலைக்கு சென்று வார்ட்டுக்களை பார்வையிட்ட பின்னர் டாக்டர்களிடமும், தாதியர்களிடமும் அங்குள்ள குறைபாடுகளை கேட்டறிந்த அமைச்சர்கள் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

அதிகாரிகள், பொதுமக்களின் பிரதிநிதிகள், வைத்தியசாலை நலன்புரிச்சங்கம் என்பன இக்கலந்துரையாடலில் பங்கேற்று நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் நவவி ஆகியோரும் இந்த பிரதேசத்திலுள்ள மக்கள் மருத்துவ சேவை பற்றாக்குறையினால் படுகின்ற அவஸ்தைகளையும், அவலங்களையும் எடுத்துரைத்தனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கற்பிட்டி வைத்தியசாலையில் நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்தரைத்ததுடன் அதற்கான தீர்வை வழங்குவதாக அமைச்சர்ர ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அத்துடன் தனது அழைப்பை ஏற்று மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலை மற்றும் புத்தளம் வைத்தியசாலைகளுக்கு வருகை தந்தமைக்கும் அமைச்சர் ராஜிதவிற்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நன்றி தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, வடமேல் மாகாண சுகாதார அமைச்சர் எல் எச் வெதருவ, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் டி பி விக்ரமசிங்க, வடமேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான அலி சப்ரி, டாக்டர் இல்யாஸ், முஹ்சி, வடமேல் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் பரீட் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *