வடமாகாண கைத்தொழில் மயமாக்கத்தின் அடுத்த கட்டமாக அச்சுவேலியில் தற்போது இயங்கி வரும் கைத்தொழில் பேட்டையை 100 மில்லியன் ரூபா செலவில் விஸ்தரிப்பதற்கு, தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை (10) இடம்பெற்ற பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் பொருட்களுக்கான சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,
இந்தியாவின் ஸ்மார்ட் டெக்ஸ் எக்ஸ்போஸ் நிறுவனத்துடன் எமது அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) காட்சிப்படுத்தும் இந்த சர்வதேச நிகழ்வில் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது.
உள்ளூர் மற்றும் சர்வதேச கைத்தொழில் துறை சார்ந்தவர்கள், தமது இறப்பர் மற்றும் கைத்தொழில் செயன்முறைப் பொருட்களை கண்காட்சிக்கு வைத்திருப்பது இந்தத் துறையை மேலும் வலுவூட்ட உதவும் என நம்புகின்றேன்.
வடமாகாணத்திலே 200 மில்லியன் ரூபா இந்திய உதவியுடன் 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை, மேலும் விரிவாக்கி வினைத்திறனை அதிகரிக்கும் வகையிலேயே, எமது அமைச்சின் அதிகாரிகள் தற்போது திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனர்.
வடமாகாணத்தின் முன்னோடியானதும், பிரமாண்ட அளவிலானதுமான அச்சுவேலி கைத்தொழில் வலயத்தில், இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தித் துறையையும் இலக்காகக் கொண்டு எமது செயற்திட்டங்களை நாம் உள்வாங்கியுள்ளோம்.
அச்சுவேலி கைத்தொழில் வலயத்தில் முதலீட்டளர்களும், உற்பத்தியாளர்களும் முதலீடு செய்து புதிய தொழிற்துறைகளை ஆரம்பிக்குமாறும், அதன்மூலம் உச்ச இலாபத்தையும், பயனையும் பெற்றுக்கொள்ளுமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
2014 ஆம் ஆண்டு இந்த தொழில் பேட்டையை ஆரம்பிக்க உதவிய இந்தியாவுக்கு எமது அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இந்தக் கைத்தொழில் கண்காட்சித் தொடரானது, இலங்கை உற்பத்தியாளர்களை இந்தத் துறையில் ஊக்குவிப்பதற்கு வழிவகுக்குமென நான் நம்புகின்றேன்.
அத்துடன், மூலவள விநியோகஸ்தர்கள், கருவிகள் உற்பத்தியாளர்கள், இயந்திராதிகள் மற்றும் உபகரண உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்களுடன் கைத்தொழிற்துறை சார்ந்த நிபுணர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கிடையிலான வலுவான உறவுப் பிணைப்பை உருவாக்குமென்பது எனது நம்பிக்கையாகும்.
வர்த்தகத்திலிருந்து வர்த்தகத்தை ஒரே மேடையில் கொண்டு வந்து, அவர்களின் அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் இந்தக் கண்காட்சியின் பெறுபேறுகள் உதவுமெனவும், சர்வதேசச் சந்தையில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் நுழைவதற்கான அடித்தளத்தை உருவாக்குமென்பதே எனது கருத்தாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்வில், உரையாற்றிய ஸ்மார்ட் எக்ஸ்போஸ் அன்ட் பெயார்ஸ் இந்தியா பிரைவட் லிமிடட்டின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பி.சுவாமிநாதன் கூறியதாவது,
2012ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இலங்கையின் பிளாஸ்டிக் செயன்முறையானது 18% சதவீத அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. 2012ஆம் ஆண்டில் 02 இலட்சம் மெட்ரிக் டொன்னாக இருந்த இலங்கையின் பிளாஸ்டிக் இறப்பர் பாவனையானது, 2017இல் 05 இலட்சம் மெட்ரிக் டொன்னாக அதிகரித்துள்ளது என்றார்.
இந்த நிகழ்வில், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் மஹிந்த ஜினதாஸ மற்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.