யுத்தகாலத்தில் வெளியேறிய மக்களின் பூர்வீகக் காணிகளை மக்கள் இல்லாத வேளையில் கையகப்படுத்திய வனபரிபாலனத் திணைக்களம், தற்போது அந்த மக்கள் தமது நிலங்களில் மீள்குடியேற முயற்சிக்கும் போது, அதனை விடிவிப்பதில் அசிரத்தைக் காட்டுவது ஏனென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வனபரிபாலனத் திணைக்கள அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பிரதியமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோரின்  தலமையில், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் பங்குபற்றுதலுடன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபாவின் நெறிப்படுத்தலில், இன்று காலை (03) வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே, அமைச்சர் ரிஷாட் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

வவுனியா வடக்கில் அமைந்துள்ள இரண்டு கிராமங்களில் வாழ்ந்த மக்களின் பூர்வீகக் காணிகள் வனபரிபாலனத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருப்பதால், அந்த கிராமங்களில் வாழ்ந்த சுமார் 35 குடும்பங்கள் மீளக்குடியேற வந்து, தமது இடங்களுக்குள் செல்ல முடியாது தவித்து வருவது தொடர்பாக, ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அமைச்சர் இந்த விவகாரம் தொடர்பில் அங்கு சில ஆலோசனைகளை முன்வைத்த போது, ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

வனபரிபாலனத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதில், குறித்த திணைக்களத்துக்குப் பொறுப்பான மாவட்ட அதிகாரிகள் ஆர்வங்காட்டுவதாகத் தெரியவில்லை. மக்கள் படும் துன்பங்களை கவனத்திற்கொண்டு மனிதாபிமான ரீதியில் அதிகாரிகள், சில இடைக்கால ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். அதற்கான அங்கீகாரத்தை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு வழங்கும் என்ற ஆலோசனையை அமைச்சர் முன்வைத்த போது, அதற்கான அங்கீகாரத்தை ஒருங்கிணைப்புக் குழு வழங்கியது.

காணிகளை விடுவிப்பதற்காக சூழல் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளரின் அனுமதி தேவை என்றும், அரசாங்க அதிபரினூடாக அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட வனபரிபாலனத் திணைக்கள அதிகாரி தெரிவித்த போது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

வனபரிபாலனத் திணைக்களம், அளவையாளர் திணைக்களம் மற்றும் கச்சேரி உயரதிகாரிகள் இணைந்து, இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை ஒருங்கிணைப்புக் குழுவின் உயர்மட்டம் வலியுறுத்தியது.

வவுனியா பம்பைமடுவில் நகரசபையினாலும், பிரதேச சபையினாலும் தொடர்ச்சியாகக் கொட்டப்பட்டு வரும் குப்பையின் காரணமாக, அந்த மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பாதிப்புகள் குறித்து, எத்தனையோ தடவைகள் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதிகாரிகள் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்ட போதும், இன்னுமே இந்தப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

இந்தப் பிரதேசத்துக்கு அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக வளாகச் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பிரதேசத்தில் உள்ள மக்கள் போராட்டங்களுக்குப் புறப்பட்ட போது, “அவ்வாறு மேற்கொள்ள வேண்டாம். இதற்கான தீர்வைப் பெற்றுத் தருவோம்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

குப்பை பிரச்சினை மனிதர்களை மட்டும் பாதிக்கவில்லை என்றும், அங்கு கொட்டப்படும் பொலித்தீன்களை உண்டு நாய்கள் மற்றும் மாடுகளும் அன்றாடம் இறப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பிலும் அமைச்சர் முன்வைத்த ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று அமைப்பதென தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழுவில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சூழலியல் அதிகாரி, வனபரிபாலனத் திணைக்கள அதிகாரி, பிரதேச செயலாளர், நகரசபை – பிரதேச சபை அதிகாரிகளை உள்ளடக்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

இவர்கள் இரண்டு வாரங்களுக்குள் கூடி சூழல் மதிப்பீட்டு அறிக்கையை பெற்றுக்கொள்வது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென அங்கு வலியுறுத்தப்பட்டதுடன், மேற்கொண்டு திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான செயற்பாடுகளுக்கு நிதியுதவியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

அத்துடன், வவுனியா, பூந்தோட்டம் கூட்டுறவுக் கல்லூரியை விடுவிப்பது தொடர்பாகவும் அங்கு பேசப்பட்டு சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *