இலங்கை முஸ்லிம் சமுதாயம் ஒரு வரலாற்று பொக்கிஷம் ஒன்றை இழந்துவிட்டதாக சமூக ஆய்வாளரும், கல்வியியலாளருமான ஏ.எல். எம். ராசிக் அவர்களின் மறைவு குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் ஸ்தாபகப் பொதுச் செயலாளரான மர்ஹும் ராசிக், முஸ்லிம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் முஸ்லிம் ஆசிரியர்களின் உரிமை மற்றும் நலன்களைப் பேணுவதிலும் அதீத அக்கறை காட்டியவர். சமுதாயத்தின் கல்விக்காக தமது வாழ்நாளில் பெரும்பகுதியை அர்ப்பணித்த அன்னார், முஸ்லிம் சமூதாயத்தின் கல்வி மேம்படவேண்டும் என்பதில் வழிகாட்டியாகத் திகழ்ந்த நளீம் ஹாஜியாரின் கல்வி முன்னேற்றப் பணிகளில் ஆர்வமுடன் இணைந்து பணியாற்றியவர்.

நளீம் ஹாஜியாரின் கருத்திட்டத்தில் உதித்த இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும், ஆலோசகராகவும் பணியாற்றி நாடளாவிய ரீதியில் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் செயற்பாடுகளை விரிவாக்கியவர். அதன் மூலம் பாடசாலைகளில் முக்கியமான பாடங்களை மாணவர்களுக்கு இலவசமாக போதிப்பதற்கான நளீம் ஹாஜியாரின் சமூக நல கல்விச் செயற்பாடுகளுக்கும் சிந்தனைக்கும் உயிருட்டியவர்.

முஸ்லிம் சமுதாயம் தொழில்நுட்பத் துறையில் பின்னடைந்து இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் பேருவளையில் நளீம் ஹாஜியார் ஆரம்பித்த இக்ரா தொழில்நுட்பக் கல்லூரியின் ஆலோசகராகவிருந்து மரணிக்கும் வரை இந்தப் பணிகளை செவ்வனே முன்னெடுத்தவர் மர்ஹூம் ராசிக் அவர்களே. மர்ஹூம் ஷாபி மரைக்காரின் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் கல்விப் பணிகளில் இணைந்து அவர் ஆற்றிய காத்திரமான பங்களிப்புக்களை நான் இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

கலாநிதி பதியுதீன் மஹ்முத் இஸ்லாமிய சோசலிஷ முன்னணியின் ஆரம்பகால உறுப்பினரான மர்ஹூம் ராசிக் முஸ்லிம்களை அரசியல் ரீதியில் விழிப்பூட்டுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம்.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் அஹகமட் முனவ்வரின் தயாரிப்பில் ஒளிபரப்பான ‘இதயத்தில் வாழ்வோர்’ எனும் நிகழ்வில் 10ஆண்டுகளாக பங்கேற்று சன்மார்க்க அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் ஆகியோரின் சமூகப் பணிகளை தமிழ் கூறும் நல்லுலகிற்கு மிகவும் துல்லியமான தமிழில் வழங்கி நேயர்களின் பாராட்டைப் பெற்றிருக்கின்றார்.

பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியுள்ள மர்ஹூம் ராசிக், அரசியல், வரலாற்றுப் பின்புலங்களை ஆய்ந்து, தோய்ந்து அவற்றை வெளிப்படுத்தியவர்.

பன்முகத் தளங்களில் நின்று பணியாற்றிய பன்னூலாசிரியர்  மர்ஹும் ராசிக்கின் காத்திரமான பணிகள் காலத்தால் அழியாதவை.

பொல்காவலையைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹூம் ராசிக்கின் மறைவால் துயருறும் குடும்பத்திற்கு, இறைவன் மன அமைதியையும், பொறுமையையும் வழங்க வேண்டும் என தான் பிரார்த்திப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *