மியன்மாரிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு இராணுவம் நடாத்திவரும் காட்டுமிராண்டித்தனமான, எல்லைமீறிய வன்முறைகளை வன்மையாக கண்டித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், சர்வதேச சமூகமும், ஐ.நாவும் மியன்மார்; முஸ்லிம்கள் மீது இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை கண்டும் காணாததுபோல் இருப்பது வேதனையானது  எனவும் தெரிவித்துள்ளார்.

மியன்மார் வன்முறைகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையிலுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

சுமார் 400 அல்லது 500 வருடங்களுக்கு மேலாக மியன்மாரில் பாரம்பரியமாக வாழும் இந்த முஸ்லிம்கள் அனைவரையும் வெளியேற்றுவதற்கு மியன்மார் அரசு, தனது அத்தனை பலங்களையும் பிரயோகித்து வருகின்றது. இந்த முஸ்லிம்களில் அநேகர்  சுமார் 17நாடுகளில் வெளியேறி தஞ்சமடைந்துள்ளனர். எஞ்சியிருக்கும் முஸ்லிம்களை அழிக்கும் நடவடிக்கைகளையே மியன்மார் அரசு தற்போது மேற்கொண்டுவருகின்றது. 1991ம் ஆண்டு உலக சமாதான நோபல் பரிசு பெற்றவரும், ஜனநாயக கட்சியின் தலைவரும், நிழல் பிரதமருமான ஆங்சாங் சூகி, மியன்மார் தாக்குதலுக்கு துணைபோவது பல்வேறு கேள்விகளை எழச்செய்துள்ளது. இந்த தாக்குதல் ஜனநாயகத்திற்கு விடுக்கும் எச்சரிக்கையா? அல்லது உலக முஸ்லிம்களுக்கு மறைமுகமாக விடுக்கும் அச்சுறுத்தலா? எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

மியன்மார் அரசின் ஆதரவில் நடாத்தப்பட்டுவரும் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேசம் இன்னும் மௌனமாக இருப்பது ஏன்? ஐக்கியநாடுகள் சபை கண்டும் காணாதது போல குருடாகவும், செவிடாகவும் இன்னும் இருக்காமல், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களையும்,  அநியாயங்களையும் நிறுத்துவதற்கு தனது பலத்தை பிரயோகிக்கவேண்டும் எனவும் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்தியுள்ளார்.

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைத்து அவர்கள் நிம்மதியாக வாழ, ஹஜ்ஜாஜிகளும் அனைத்து முஸ்லிம்களும் புனித அறபா  தினத்தன்று நோன்பு நோற்று, பிரார்த்தனை செய்யுமாறும்  அமைச்சர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *