பேரினக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் சிலர், தமது கட்சித் தலைவர்களின் பெயரைப் பயன்படுத்தி, அதிகாரிகளை அச்சுறுத்தி தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அரசியல் இருப்பு மற்றும் எதிர்காலத் தேர்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டே, அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவற்றில் மக்கள் நலன் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட மாகாணசபை உறுப்பினர் ஜனோபரின்  நிதியொதுக்கீட்டில் வாழ்வாதாரத் திட்டம் வழங்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் (12) முல்லைத்தீவு, ஹிஜ்றாபுரத்தில் இடம்பெற்றபோதே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், மாகாண சபை உறுப்பினர் ஜனோபர், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், பிரதேச சபை தவிசாளர்களான முஜாஹிர், நந்தன், சுபியான் உட்பட பலரும் பங்கேற்று உரையாற்றினர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,  

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டு தென்னிலங்கையில் வாழ்ந்த போது, அவர்கள் வாழ்ந்த அகதி முகாம்களுக்குச் சென்றும், அவர்களின் குடியிருப்புக்களுக்குச் சென்றும் நாமே உதவினோம். அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் நாமும் முகங்கொடுத்து, அவற்றை முடிந்தளவில் தீர்த்து வைத்திருக்கின்றோம். மாணவர்களின் கல்விக்கு உதவினோம். வாழ்வாதார முயற்சிகளுக்கும் கை கொடுத்தோம்.

வடக்கிலே, மீள்குடியேற்றத்துக்கான சூழல் ஏற்பட்டபோது, முல்லைத்தீவு மாவட்டத்தில் பரம்பரையாக வாழ்ந்த நமது சமூகத்தவரும் மீளக்குடியேற வந்தனர். எனினும், அவர்களின் மீள்குடியேற்றத்துக்கு ஏற்படுத்தப்பட்ட முட்டுக்கட்டைகள் மற்றும் தடைகள் பாதிக்கப்பட்ட உங்களுக்கும் தெரியாததல்ல.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டங்களின் போதெல்லாம், நமது சமூகத்தின் மீள்குடியேற்றப் பிரச்சினையை பிரஸ்தாபித்து, மனிதாபிமான முறையில் உதவுமாறும், கோரிக்கை விடுத்திருக்கின்றோம். நமது மக்கள் படுகின்ற துன்பங்களை எடுத்துரைத்திருக்கின்றோம்.

எனினும், முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிரான சக்திகள், அந்தக் கூட்டங்களில் எமது கோரிக்கைகளை நிராகரித்தது மாத்திரமின்றி, மழுங்கடிக்கும் வகையிலான கருத்துக்களையும் தெரிவித்தனர். நாம் அதற்குப் பதில் கொடுக்கும் போதெல்லாம், அவற்றை திரிபுபடுத்தி, எம்மைக் கொச்சைப்படுத்தி, எம்மை இனவாதியாகக் காட்டவே முற்பட்டனர். சில ஊடகங்களும் இவர்களுக்குத் தீனி போட்டன.

முல்லைத்தீவில் நமது சமூகத்தை மீள்குடியேற்றுவதற்காக நாம் பட்ட கஷ்டங்களை இங்கு விலாவாரியாகக் கூறமுடியாத போதும், பாதிக்கப்பட்ட உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். மனச்சாட்சி உள்ள எவரும் இவற்றை மறக்கமாட்டார்கள்.

நமது சொந்த நிலங்களில் குடியேறுவதில் இருந்த தடைகளைப் போன்று, இந்தப் பிரதேசத்துக்கு மீளக்குடியேற வந்தவர்களுக்கு ஓர் அரை ஏக்கர்தானும் அரச காணியைப் பெறுவதற்கு, நாம் எடுத்த முயற்சிகள் எல்லாம் தடுக்கப்பட்டன. இந்த மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கென 09 தடவைகள் காணிக் கச்சேரிகள் இடம்பெற்றன. எனினும், இற்றைவரை எந்தப்பயனும் அவர்களுக்குக் கிட்டவில்லை. எந்தவொரு வீட்டுத்திட்டத்திலும் அவர்கள் உள்வாங்கப்படவில்லை. இதுதொடர்பில், அதிகாரிகளுடன் நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் நான் உரையாடியிருக்கின்றேன். இவ்வாறான சவால்கள் இருந்தபோதும், நல்ல மனங்கொண்ட, பண்பான சகோதர தமிழ் அரசியல்வாதிகள் எமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு, எமக்கு ஆதரவளித்தனர். அந்தவகையில், மாகாண சபை பிரதி அவைத் தலைவர் காலஞ்சென்ற அன்டனி ஜெகநாதன், முன்னாள் எம்.பி கனகரட்ணம், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.சிவமோகன் ஆகியோரை நாம் மறந்துவிட முடியாது.

மீள்குடியேற்றத்தின் ஆராம்பகாலத்தில், மக்கள் காணிகளை துப்புரவாக்கும் பணியைத் தொடங்கியபோது, டோசர்களுக்கு குறுக்கே படுத்து, மீள்குடியேற்றப் பணியைத் தடுத்தனர். மீள்குடியேற்றத்துக்கு அரசு உதவாத நிலையில், அரபு நாட்டு நிறுவனங்களின் உதவியுடன், இந்த மக்களுக்கு வீடுகளைக் கட்டுவதற்காக அரச காணிகளை முறைப்படி பெற்றோம். குறிப்பிட்ட நன்கொடையாளர் இந்த இடங்களைப் பார்வையிட வந்தபோது, இந்த தீவிர எதிர்ப்பாளர்கள் எதுவும் அறியாத அப்பாவிப் பல்கலைக்கழக மாணவர்களை இந்தப் பிரதேசத்துக்குக் கொண்டுவந்து, நாம் காடழிப்பதாக ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்தனர். ரிஷாட் காடழிப்பதாக சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு எனக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தினர். வெளியுலகத்தில் என்னைக் கேவலப்படுத்தினர்.

நாம் இந்த அக்கிரமங்களை எல்லாம் தாங்கிக்கொண்டடே எமது முயற்சிகளை முன்னெடுத்தோம். எனினும், இந்தப் பிரதேசத்துக்கு வந்த முஸ்லிம் கட்சியின் தலைவர், மீள்குடியேற்ற செயற்பாடுகள் குறித்து பேசிய பேச்சுக்கள், வெந்தபுண்ணில் வேல் பாய்ந்தது போன்றே இருந்தன.

“அமைச்சர் ரிஷாட் இவ்வாறான அணுகுமுறைகளைப் பயன்படுத்தி காணிகளைப் பெறமுடியாது. விட்டுக்கொடுப்பின் மூலமே, முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை சாத்தியமாக்கலாம். தமிழ் தரப்புக்களுடன் பேசி, இணக்கப்பாட்டுடன் மீள்குடியேற்றத்தை சாத்தியமாக்கி தருகின்றேன்” என்று கூறிச்சென்றவர், சென்றவர்தான். அவர் இற்றைவரை இது தொடர்பில் எடுத்த நடவடிக்கை என்னவென்று கேட்க விரும்புகின்றேன்?

முல்லைத்தீவு மக்களின் மீள்குடியேற்றத்துக்கோ, வாழ்வாதாரத்துக்கோ அவர்கள் என்றாவது உதவினார்களா? உங்களுக்கு எத்தனை வீடுகளைக் கட்டித் தந்துள்ளார்கள்? இவற்றை உங்களின் சிந்தனைக்கே விடுகின்றேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *