முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரின்  மறைவு முஸ்லிம் சமூதாயத்துக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்கும் பேரிழப்பாகும் என்று அவரது மறைவு குறித்து அமைச்சர் றிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியில் கவலை தெரிவித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது.

நல்லதோர் அரசியல் பரம்பரையின் பின்புலத்தில் வாழ்ந்த, மர்ஹூம் மன்சூர் முஸ்லிம் சமூக அரசியலுக்கு முன்னோடியாக விளங்கியவர். கல்முனை முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் மருமகனான இவர், அரசியலில் பல்வேறு பரிமாணங்களை வகித்தவர். பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, மாவட்ட அமைச்சராக, வெளிநாட்டுத் தூதுவராக பணிபுரிந்து நாட்டுக்கும் சமூகத்துக்கும் அளப்பரிய பணிகளை ஆற்றியவர்.

எந்தவொரு விடயத்திலும் துணிந்து முடிவுகளை மேற்கொள்வார்.

சட்டத்தரணியான இவர், ஆங்கிலத்திலும் பாண்டித்தியம்பெற்றிருந்ததுடன் சிறந்த பேச்சாற்றல் உடையவராகவும் விளங்கினார். அமரர் பிரேமதாசாவின் காலத்தில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக இருந்த போது, புனித ரமழான் காலத்தில் அரபு நாடுகளிலிருந்து பேரீத்தம் பழங்களை பெற்று பகிர்ந்தளிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

ஐக்கிய தேசியக்கட்சியின் நீண்ட கால உறுப்பினரான இவர், கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு தியாகங்களை மேற்கொண்டிருக்கின்றார். தேசியக் கட்சிகள் ஊடாகவும் முஸ்லிம் சமூக அபிலாசைகளை வென்றெடுக்க முடியுமென்பதை நிரூபித்தவர். ஜெ.ஆர்.ஜெயவர்த்தனவின்  காலத்தில் சியோஷிசவாதிகள் இலங்கையில் காலூன்ற எடுத்த முயற்சியை கடுமையாக எதிர்த்ததுடன் இஸ்ரேலியத்தூதரகத்தை இலங்கையில் நிறுவ எடுத்த முயற்சியை தடுத்து நிறுத்தியவர். முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராக,  இக்கட்டான காலதத்தில் பணியாற்றிய  அவர,; அந்தப் பிரதேச மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கைகொடுத்திருக்கிறார்.

மர்ஹூம் அஷ்ரபின் இறுதிக் காலத்தில், அஷ்ரபின் சமூக மேம்பாட்டுப் பணிகளில் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்கினார். தமிழ் – முஸ்லிம் நல்லுறவுக்கு பெரும் பாலமாக விளங்கிய அன்னார், கல்முனை மாநகர அபிவிருத்தியில் பெரும்பங்காற்றினார்.

அன்னாரின் மறைவால் கவலையுறும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை வழங்குவானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *