ஐரோப்பிய யூனியனின் ஜீ.எஸ்.பி.பிளஸ் இலங்கைக்கு கிடைத்ததன் பின்னர், நாட்டின் புடவை மற்றும் ஆடைக் கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதி வெகுவாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.
இன்ரெக்ஸ் சவுத் ஏசியா  – 2017 சர்வதேச கண்காட்சி கொழும்பில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள சிறிலங்கா கண்காட்சிகள் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
புடவை மற்றும் ஆடைகள் கைத்தொழில் வழங்குனர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சர்வதேச கண்காட்சியில் பிரதமர் ரணில்விக்ரமசிங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஆர்.பி. மார்க், இந்திய உயர்ஸ்தானிகர் சிறி டரன்ஜீத் சிங் சந்து ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 2015ம், 2016ம் ஆண்டுகளிலும் இவ்வாறான இரண்டு காண்காட்சிகள் கொழும்பில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென்னாசியாவிலேயே பிரமாண்டமான இந்த கண்காட்சியில் சீனா, இந்தியா, கொங்கோங் ஆகிய நாடுகளிலிருந்தும் முன்னனி ஆடை வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன
அமைச்சர் பதியுதீன் கூறியதாவது,
பிரதமர் ரணில்விக்ரமசிங்கவின் முயற்சியின் பலனாக கிடைக்கப்பெற்ற ஜீ.எஸ்.பி.பிளஸ் எமது ஆடைகள் ஏற்றுமதி துறையில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தவருடம் ஜனவரி தொடக்கம் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் 11.3சதவீதமாக அது அதிகரிக்கப்பட்டு 1.67 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டி தந்துள்ளது.
எமது அரசாங்கம் சர்வதேசத்துடனான தொடர்புகளை வலுப்படுத்துவதற்காக விசேட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஐரோப்பிய யூனியனின் ஜீ.எஸ்.பி.பிளஸ் கிடைக்கப்பெற்றதன் பின்னரேயே ஏற்றுமதித்துறையில் குறிப்பாக ஆடைக் கைத்தொழில் ஏற்றுமதியில் பலமான நிலையை நாம் அடைந்துள்ளோம்.
2016ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் செப்டம்பர் வரை ஐரோப்பிய யூனியனுக்கான ஆடை ஏற்றுமதிப் பொருட்கள் அதே காலப்பகுதியான 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2சதவீதமாகவே அதிகரித்திருந்தது. ஆனால்  ஜீ.எஸ்.பி.பிளஸ் கிடைத்த பின்னர் இவ்வருடம் ஜனவரி தொடக்கம் செப்டம்பர் வரையில், கடந்த வருட அதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 1.5பில்லியனிலிருந்து 1.67பில்லியனாக உயர்வடைந்து 11.3சதவீத வளர்ச்சியை எய்தியுள்ளது.
அதுமட்டுமன்றி, எமது நாட்டின் அனைத்து நாடுகளுக்குமான மொத்தப் புடவை ஏற்றுமதியானது,  இந்த வருடம் ஜனவரி தொடக்கம் செப்டம்பர் வரை 13.4சதவீதமாக அதிகரித்து 3.97பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.
அடுத்தவருடம் இந்த ஏற்றுமதியின் வளர்ச்சி வீதம் மேலும் அதிகரிக்குமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *