உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (08) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுடன் இணைந்து, இந்த முறைப்பாட்டை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் செய்துள்ளார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், விமல் வீரவன்சவின் இனவாதக் கருத்துக்களையும், அப்பட்டமான பொய்களையும், பிழையான குற்றச்சாட்டுக்களையும் கண்டித்ததுடன், அது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு உரிய கவனம் செலுத்துமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாஸா விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது,

“கொரோனா ஜனாஸாக்களை தொடர்ந்தும் எரிக்க வேண்டுமென்ற அரசின் நிலைப்பாடு அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கை ஆகும். இலங்கை வாழ் இருபது இலட்சம் முஸ்லிம்களும் இன்று வெந்து, நொந்து போயுள்ளனர். அதுமாத்திரமின்றி, உலகிலுள்ள சுமார் இரண்டு பில்லியன் முஸ்லிம்களும் கவலையில் இருப்பதோடு, பல நாடுகள் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன. இதன் விளைவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி, நாட்டையும் சமூகங்களையும் பாதிக்கும்.

முஸ்லிம் சமூகத்தை இந்த அரசு பழிவாங்குவதற்காகவே எமது மத உரிமையை தடுத்து நிறுத்துகின்றது. அரசியலில் ஞானம் உள்ளவர்களாக இருந்தால் இவ்வாறான பிற்போக்குத்தனமான, படுகேவலமான செயலை  செய்யமாட்டார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனிதநேயமுள்ள மாற்று மத பிரமுகர்களும் இதனை வென்றெடுப்பதில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், நாட்டின் முன்னாள் தலைவர்களான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் எம்.பிக்கள், சிங்கள எம்.பிக்கள் உட்பட சிவில் சமூக ஏற்பாட்டாளர்களும் இதற்காக குரல் எழுப்பி வருகின்ற போதும், அரசும் சுகாதார அமைச்சும் இன்னும் செவிடன் காதில் ஊதிய சங்குபோலதான் இருக்கின்றன.

எத்தனையோ பேச்சுவார்த்தைகள், ஆர்ப்பாட்டங்களை எல்லாம் புறக்கணித்து, கருத்திற்கெடுக்காது, சமூகத்தின் மதம் சார்ந்த கோரிக்கையை தட்டிக்கழிப்பதன் நோக்கம் வெறுமனே அரசியல் சார்ந்தது மட்டுமே.

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் எம்.பிக்கள் “இன்று சரிவரும், நாளை சரிவரும்” என்ற நம்பிக்கையை அளித்து வருவதினாலேயே, சமூகம் இன்னும் பொறுமை காக்கின்றது. “வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கக் கூடாது” என்ற கோரிக்கையும் எழுந்து வந்தது. எனினும், எதுவுமே நடந்ததாகத் தெரியவில்லை. புதிய நிபுணர் குழுவின் அறிக்கையைக் கூட தட்டிக்கழிக்கும் சுபாவத்தில் தான் இன்னும் இருக்கின்றனர்” என்றார்.

By shafni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *