காலி ஜிந்தோட்டை பகுதியில் இன்று மாலை (17) மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முறைச்சம்பவங்களை உடன் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கைவிடுத்தார். வன்முறையாளர்கள் அங்கு மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களால் முஸ்லிம் மக்கள் வீடுகளில் அச்சத்துடன் அடைந்து கிடப்பதாகவும் விசேட அதிரடிப்படையினரை மீண்டும் அந்தப் பிரதேசத்துக்கு அனுப்பி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் பொலிஸ்மா அதிபரிடம் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

இதே வேளை காலியில் தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள் குறித்து அமைச்சர் வஜிர அபேயவரத்தனவுடனும் தொடர்புகொண்டு அமைச்சர் றிஷாட் நிலைமைகளை விளக்கினார். முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும் பீதியையும் நீக்கும் வகையில் உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்யுமாறு தெரிவித்த அமைச்சர் றிஷாட் யுத்த காலத்தில்தானும் காலியில் இவ்வாறான வன்முறைச்சம்பவங்கள் இடம்பெறவில்லையெனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அமைச்சர் றிஷாட் காலி பிரதிப் பொலிஸ்மா அதிபர் அழகக்கோனுடன் தொடர்புகொண்டு விசேட அதிரடிப் படையினரை பாதுகாப்புக் கடமையில் மீண்டும் ஈடுபடுத்துமாறும் பணிப்புரைவிடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *