உயர்தரப் பரீட்சை எழுதும் சகல மாணவர்களதும் அபிலாஷைகள் வெற்றிபெற வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் (04) உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

“மாணவர்களின் அடைவுமட்டம், பெற்றோர்களின் இலட்சியங்களை ஈடேற்ற உதவட்டும். கல்வியில் கைதேர்ந்து, பொறுப்புள்ள பிரஜைகளாக மாணவர்கள் வளர எனது பிரார்த்தனைகள்.

தொழில்நுட்ப உலகில் அதிகரிக்கும் சந்தைப்போட்டிகள் மற்றும் தொழில் சந்தைகளுக்குள் நுழைவதற்கான சவால்களை வெல்வதற்கு கல்விப்புலமைகளே கைகொடுக்கும். பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

கல்வித்திட்டங்களிலும் பாடப்பரப்புக்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, மாணவர்களின் எதிர்காலத் தெரிவுகள் விசாலமாக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகம் மட்டும்தான் கைகொடுக்கும் என்ற கனவில் காலம் கடத்துவது பயனுள்ளதாக அமையாது. எனவே, பரீட்சையில் திறமையுடன் தோற்றி, எதிர்கால அத்திவாரத்தைத் திடமாக இடுமாறு வாழ்த்துவதோடு பிரார்த்திக்கின்றேன்.

பரீட்சை எழுதும் மாணவர்களே, உங்களது பெற்றோரின் எண்ணங்களை உணர்ந்து செயற்படுங்கள். இராப்பகலாக விழித்த தாய்மார்கள், அயராது உழைத்த தந்தையர்கள் மற்றும் பாதுகாவலர்களின் விலையில்லா எதிர்பார்ப்புக்களாக உள்ளவை, உங்களது வளமான எதிர்காலமே!” என்று குறிப்பிட்டுள்ளார்.

By editor1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *