(எம்.எப்.எம்.பஸீர் – வீரகேசரி) 

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளில், சந்தேக நபராக கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை அது தொடர்பிலான அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (2) உத்தரவிட்டது.

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடந்த தாக்குதல்கள் சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே இதற்கான உத்தரவை கோட்டை நீதிவான் திலின கமகே பிறப்பித்தார்.

இன்று புதன்க்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மன்றில் ஆஜராகியிருந்தார். அவருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் தலைமையில்  ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட  குழுவினர் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் போதுமான சான்றுகள் இல்லாததால், குறித்த வழக்கில் சந்தேக நபராக   பெயரிடப்பட்டிருந்த ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கை முன் கொண்டு செல்ல முடியாது என சட்ட மா அதிபர் எழுத்து மூலம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிவான் திலின கமகே, சட்ட மா அதிபரின் ஆலோசனை பிரகாரம் குறித்த வழக்கிலிருந்து ரிஷாத் பதியுதீனை  விடுவிப்பதாக அறிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளுக்கு என, கடந்த  2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்  ரிஷாத் பதியுதீன் முதலில் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.

பின்னர் 2021 ஏப்ரல்  27 ஆம் திகதி 90 நாள் தடுப்புக் காவவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் அப்போதைய ஜனாதிபதி  கோட்டாபய வழங்கிய அனுமதிக்கு அமைய தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையிலேயே  தடுப்புக் காவல் விசாரணைகளின் நிறைவில் அவர், பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயம் பிரகாரம் கடந்த  2021 ஆகஸ்ட் 10 ஆம் திகதி  கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணையின் கீழ் உள்ள, கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்த வழக்குக் கோவையில்  சந்தேக நபராக ரிஷாத் பதியுதீனை  சி.ஐ.டி.யினர் முன்னிலைப்படுதியிருந்தனர்.

‘சினமன் கிராண்ட் தற்கொலைதாரியான இன்சாப் அஹமட்டுக்கு குளோசஸ் எனும் செப்பு உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று இருந்தது. அந்த நிறுவனத்துக்கு விதிமுறைகளை மீறி சந்தேக நபர் செப்பு உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ள உதவியுள்ளார்.

செப்பு தொடர்பிலான உற்பத்திகளில் ஈடுபடும் நிறுவங்களுக்கு, சந்தேக நபர் பதவி வகித்த அமைச்சின் கீழ் இருந்த நிறுவனம் ஊடாக முன்னர் மூலப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய வழி முறைகள் முன்னாள் ஜனாதிபதி செயலர் உதய ஆர். செனவிரத்ன ஊடாக வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் குளோசஸ் நிறுவனத்துக்கு விதிமுறைகளை மீறி மூலப் பொருள் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை குறித்த அமைச்சின் மேலதிக செயலராக இருந்த பாலசுப்ரமணியம் என்பவர் வழங்கியுள்ளார். ரிஷாத் பதியுதீனின் தலையீட்டுடன் அது வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கான  நிதி பிரதானமாக குளோசஸ் நிறுவனத்தின் வருமானம் ஊடாகவே பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ‘ என சி.ஐ.டி.யினர் அப்போது நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தனர்.

எனினும் அக்குற்றச்சாட்டுக்களை ரிஷாத் பதியுதீன் முற்றாக மறுத்ததுடன், தன்னை தனது அமைச்சின் மேலதிக செயலர் ஒருவருடன் தொலைபேசியில் கதைத்தமைக்காகவே கைது செய்துள்ளதாக சட்டத்தரணிகள் ஊடாக சுட்டிக்காட்டியிருந்தார் . உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தனக்கு தொடர்பில்லை எனவும் அவ்வாறு தொடர்பிருப்பதாக எந்த சான்றுகளும் சி.ஐ.டி.யிடம் இல்லை எனவும் அவர் சட்டத்தரணிகள் ஊடாக மன்றுக்கு தெரிவித்திருந்தார்.

அவ்வாறான நிலையிலேயே,  இந்த விவகாரத்தில் தனக்கு பிணையளிக்குமாறு அவர் ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா ஊடாக கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் எழுத்து மூல சமர்ப்பணம் ஒன்றினை முன் வைத்திருந்தார். அது தொடர்பிலான வாதாங்களை சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம். சஹீட்,  ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட குழுவினருடன்  ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன  முன் வைத்திருந்தார்.

இவ்வாறான நிலையில்  ரிஷாத் பதியுதீனுக்கு பிணை கோரி  எழுத்து மூல சமர்ப்பணங்களை  கடந்த 2021  செப்டம்பர் 3 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்கப்ப்ட்ட நிலையில்,   வழக்கில் பிணை பெற்றுக்கொள்ள, சட்ட மா அதிபருரின் இணக்கத்தை பெறவும் நடவடிக்கை எடுக்கப்ப்ட்டிருந்தது.

இவ்வாறான பின்னனியில் குறித்த அவ்ழக்கை சட்ட மா அதிபர் சார்பில் கையாண்ட   பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன்,  பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (1) ஆம் பிரிவின் கீழ்   இவ்வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவரான ரிஷாத் பதியுதீனுக்கு பிணையளிக்க சட்ட மா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மன்றுக்கு கடந்த 2021 ஒக்டோபர் 14 ஆம் திகதி அறிவித்திருந்தார். .

இதனையடுத்தே அப்போதைய கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னாள் அமைச்சரை பிணையில் விடுவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் ரிஷாத் பதியுதீன் 109 நாட்கள் சி.ஐ.டி.யின் பிடியிலும் 65 நட்கள் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பிலும்  சிறை வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் விசாரணை கோவைகளை பரிசீலித்துள்ள சட்ட மா அதிபர், சான்றுகள் இல்லாததால், ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கை முன் கொண்டு செல்வதில்லை என தீர்மானித்து இன்று (2) கோட்டை நீதிவானுக்கு அறிவித்த நிலையில், அவர் வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By shafni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *