– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கோரிக்கை!

அக்குரனையில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த நிரந்தரமான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டு, அந்த மக்களின் இயல்பு வாழ்வை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“இலங்கை – பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் செயலாளராக இருந்த முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய செயலாளராக டிலான் பெரேரா எம்.பி இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இஸ்ரேலின் அராஜகத்தை முடிவுக்குக் கொண்டுவர டிலான் பெரேரா எம்.பி தனது பங்களிப்பை நல்க வேண்டும் எனவும் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன், பல்வேறு அமைச்சுக்கள் தொடர்பான இன்றைய விவாதத்தில் சில விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

புத்தளம் மாவட்டத்தில் அல் ஜித்தா, ரத்மல்யாய கிராமங்களில் இருக்கும் இரண்டு பாலங்கள் சேதமடைந்து, கடந்த மூன்று வருடங்களாக அதனை புனரமைக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால், அந்தப் பிரதேச மக்கள் பெரிதும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். அந்த ஊருக்கு செல்வதற்கு பெருந்தடையாக இது இருப்பதனால் பாலங்களை புனர்நிர்மாணிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். அதேபோன்று, ஏனைய இடங்களிலும் இவ்வாறு அரைகுறை வேலைகளுடன் காணப்படும் பாலங்களின் கட்டிடப் பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகின்றேன்.

மேலும், மன்னார் – புத்தளம் பாதை தொடர்பில் பலமுறை இந்தச் சபையில் சுட்டிக்காட்டிய போதும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன், மன்னார், முசலிப் பிரதேசத்தில் அளக்கட்டு எனும் புதிய மீள்குடியேற்ற கிராமத்தில் பாதைகள், பாலங்கள் உடைந்திருந்த போதும் அவற்றை செப்பணிடப்படவில்லை. ஒரு இலட்சம் கிலோமீட்டர் பாதை புனரமைப்புத் திட்டத்திலும் இது உள்வாங்கப்படவில்லை.

அக்குரனையில் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். அந்தப் பிரதேச மக்களுக்கு அண்மையில் 300 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் 120 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. எனவே, இதற்கு நிரந்தர வேலைத்திட்டம் ஒன்று தேவை. வெளிநாட்டு உதவிகளைப் பெற்றாவது இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணுங்கள்.

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இந்த வருட நிதி ஒதுக்கீட்டில் 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் கூறினார். எனவே, அதனை துரிதமாக மேற்கொள்ளுமாறும் அதன் மூலம், மன்னாருக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்கும் நன்மை கிடைக்க வழி சமைக்குமாறும் வேண்டுகின்றேன்.

அதேபோன்று, மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் காலத்தில் நல்லநோக்குடன்டன் அமைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம், அதற்குப் பின்னர் வந்த அமைச்சர்கள் அதனை சரிவர பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டதனால், அந்தப் பிரதேச வாழ் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். ஒலுவில் துறைமுகத்தினால் அந்தப் பிரதேச மக்களுக்கு மிகவும் நன்மைபயக்கக்கூடிய நிலை இருந்தபோதும், முறையாக கவனிக்கப்படாமையினால் ஊருக்குள்ளே வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நிபுணத்துவம் வாய்ந்த வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் இந்தத் துறைமுகத்தை சீரமைத்து, மக்களின் துன்பங்களை போக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றேன்.

அதுமல்ல, மன்னாரில் அதானி நிறுவனம் கொண்டுவரவுள்ள திட்டங்கள் தொடர்பில் அறிகின்றோம். சர்வதேச ரீதியில் கீர்த்திபெற்ற மன்னார் தீவை முற்றுமுழுதாக சுற்றுலாத்துறைக்கு தாரைவார்க்க நாம் இடமளிக்க முடியாது. அத்துடன், இந்தத் திட்டங்களுக்காக அங்குள்ள தனியார் காணிகளை பலாத்காரமாக, குறைந்த விலைக்கு அரசாங்கம் வாங்கி, அதானி நிறுவனத்துக்கு இன்னுமொரு விலைக்கு கொடுக்கின்றது. இது நியாயமா? எனக் கேட்கின்றேன். தனியார் நிறுவனங்களுக்கு பொதுமக்களின் காணிகளை விற்காதீர்கள். இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலையே ஏற்படும். அத்துடன், அவுஸ்திரேலியா கம்பெனிகள் அந்தப் பிரதேசங்களில் மண்ணகழ்வுக்கான உரிமையைப் பெற்றுக்கொண்டு, தமது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையால் அப்பிரதேச வீடுகளுக்குள்ளேயும் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் கம்பெனிகள் இவ்வாறான அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குவதை நிறுத்துங்கள்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது, ஹம்பாந்தோட்டையில் சில்வர் பாக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. மங்கள சமரவீர அமைச்சராக இருந்தபொழுது சஜித் பிரேமதாசாவே இதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்தியாவும் ஓமானும் இணைந்த இந்தத் திட்டத்தை இடையில் நிறுத்தி, வேறொரு திட்டத்தைக் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன? இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை உங்களால் கவர முடியுமா?

ஊடகத்துறையில் அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அவ்வப்போது வரும் அமைச்சர்கள் தமக்கு வேண்டியவர்களை, தகுதியில்லாதவர்களை நிறுவனத் தலைவர்களாகவும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாகவும் நியமித்ததன் வெளிப்பாடே இது. எனவேதான், எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தொடர்ந்தும் நஷ்டத்தில் அரச ஊடக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பத்து வருட வேலைத் திட்டம் ஒன்றின் கீழ், அமைச்சர்கள் மாறினாலும் ஊடகக்கொள்கை மாறாத வகையில், செயற்திட்டம் ஒன்றைக் கொண்டுவாருங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.

By editor1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *